Saturday, June 27, 2009

தமிழ் ஈழம் - எதிர்காலம் ?

இப்போது அமைதியே பிரச்சினையாகியுள்ளது. இங்கும் அங்கும் அமைதி. ஈழத்தில் மயான அமைதி. தமிழகத்தில் ஆயிரமும் இலட்சமுமாய் ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும் போதும் அதன் பின்னரும் உணர்வு மரத்த அமைதி. தங்கள் இனத்தையே கொன்றழித்தவர்களுக்கு துணை போனவர்களுக்கு தாங்களே வாக்களித்து வெற்றி பெறச் செய்த அவலத்தின் அமைதி. ஆங்காங்கே வதை முகாம்களில் தமிழர்களின் துயரம் குறித்து எழுந்த மனிதாபிமானக்குரல்களுக்கும் இப்போது வடிந்து விட்டன. இனி ராஜபக்சே அரசை யாரும் கேட்கக் கூட போவதில்லை.

பதுங்குக் குழிகளில் இராசயணக் குண்டு வீச்சுகளுக்கும் கிளாஸ்டர் குண்டு வீச்சுகளுக்கும் தப்பியவர்கள், குத்துயிரும் குலைஉயிருமாக 3 இலட்சம் பேர் இனவெறி அரசின் முகாம்களில் தங்களின் இறுதிநாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். நாளொன்றுக்கு ஒரு வேளை உணவு, காயமுற்றவர்களுக்கோ, நோய்வாய்பபட்டவர்களுக்கோ சிகிச்சைக்கு வழியில்லை, மருந்துகளுமில்லை, மருத்துவர்களுமில்லை. முள்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டவர்களில் இளம் பெண்கள் பிரித்து கூட்டிச் செல்லப்பட்டு வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் காணாமல் போகின்றனர். எந்த சுகாதார வசதிகளுமில்லை. காலைக் கடன் முடித்தவர்களுக்கோ இயற்கையின் உபாதைகளை தீர்த்துக் கொள்பவர்களுக்கோ கழுவக்கூட எந்த விதத் தண்ணீரும் இல்லை.
பெண்களுக்கு மாதவிலக்கு வந்தால் அதற்கு துணிகள் கூட கிடையாது.
யூதர்களை நிர்வாணமாக்கி வட்டமாக ஓட வைத்து தலையில் பெருஞ்சுத்தியலை வைத்து பின்னாலிருந்து அடித்து கொல்லும், ‘சின்ட்லர் லிஸ்ட்’ என்ற திரைப்படத்தின் இட்லர் முகாம்களின் காட்சிகள் நம்மனங்களில் நிழலாடலாம். அன்றைக்கு இட்லர் முகாம்களின் கொடூரங்களுக்கு சான்றுகள் சாட்சியங்கள் இருந்தன. உலக நீதி மன்றத்தில் அவை விசாரிக்கப்பட்டன. இன்று ஈழ முகாம்களுக்கு எந்த சாட்சியங்களும் இல்லை. இந்தியாவின் நடுவண் அரசினை ஆளும்கட்சியின் தலைமைப்பீடத்தை வகிக்கும் இத்தாலியன் முசோலினிப் பரம்பரை உறவினரின் ஆலோசனையின் படி அச்சான்றுகள் கவனமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இது வரை ஈழத்தமிழர்களின் பாதுகாவலர்களாக இருந்த விடுதலைப் புலிகளின் பெரும்பாலோர் அழிக்கப்பட்டு விட்டனர். இனி உங்களுக்கு யார் இருக்கிறார்கள் என்று எக்களமிட்டு சிங்கள வெறியர்கள் கொண்டாடுகிறார்கள்.

முகாம்களில் தமிழர்கள்படும் துயரைக் கண்டு இரசிக்கிறார்கள். தமிழர்கள் முஸ்லீம் தமிழர்கள் வாழும் பகுதிகள் முழுவதும் ஆழ்ந்த சோகமும் அமைதியும் நிலவுகிறது. இலங்கையில் இனி தமிழர்களுக்கென தனிஅமைப்பு மட்டுமல்ல. அவர்களுக்கென்று ஒரு கட்சியோ தலைவரோ இருக்கக் கூடாது என ராஜபக்சே கட்டளையும் பிறப்பித்துள்ளார். சிங்கள அரசின் அடிமைகளாகவும் அடிவருடிகளாகவும் உள்ளதற்காக அரசில் அமைச்சர் பதவிகளை வகிக்கும் (106 பேர் கொண்ட அமைச்சரவை) டக்ளஸ், சிவசேனாப்பிள்ளை சந்திரகாந்தன் மற்றும் கருணா போன்றவர்களும் தத்தம் கட்சிகளை கலைத்து விட்டு தமிழர்களின் பிரதிநிதிகளாக சிங்கள கட்சிகள் இணைந்து விட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புலிகளுக்கு ஆதரவளித்த காரணத்தினால் 3 இலட்சம் பேரை எமது நாட்டிற்குள் குடிமக்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறைமுகமாகவும், அவர்கள் 3லிருந்து 4 ஆண்டுகள் வரை முகாம்களில் இருக்க வேண்டியிருக்கும் என்பதை நேரடியாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 10 ஆண்டுகளாக முகாம்களில் இருப்பவர்கள் இன்னும் அவர்களின் பூர்வீக இடங்களுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை. ஏனெனில் அங்கெல்லாம் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுவிட்டன.
யுத்தம் முடிந்த பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்த 3 இலட்சம் பேர் பூர்வீகமாக இருந்த பகுதிகளுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட வேண்டும் என்று சிங்களக் கட்சி ஒன்று கோரிக்கை வைத்துள்ளது. முகாம்களிலுள்ள தமிழர்களின் கதி? கேட்க நாதி இல்லை.

இங்கு ஈழத்தமிழர்களுக்கு போடப்பட்ட அனைத்து தேர்தல் நாடகங்களும் முடிந்து பல கோடீஸ்வரர்களும், சில கிரிமினல்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய “நாணயஸ்தர்களும்” வெற்றி பெற்றுவிட்டனர். தள்ளாத வயதில் தள்ளுவண்டியில் டில்லி சென்று பதவிகளுக்காக போராடிய உலகத்தமிழினத்தலைவர், ஈழத்தமிழர் படுக்கொலைக்கு மௌனமாக பச்சைகொடி காட்டி காங்கிரசுடன் ஒத்துழைத்தற்காக, தனது குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் பதவிகளைப் பெற்று தனது இலட்சியமான பிறவிப் பெருங்கடலையும் நீந்திக்கடந்து விட்டார். ஓட்டுப் பொறுக்கிகளின் துரோக நாடகங்களைப் பார்த்து விரக்தியுற்ற தமிழக மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். ஊடகங்களும் ஈழத்தில் அவர்கள் எதிர்பார்க்கின்ற அவர்களுக்கேயுரிய பரபரப்புச் செய்திகள் இல்லாததால், வதை முகாம்களின் அவல நிலையைக் காட்டுவதை நிறுத்திவிட்டன.

புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் 10 இலட்சம் பேருக்கு மேலானோர், இலங்கையில் போர் முடிந்து விட்டதால் விரைவில் திருப்பி அனுப்பப்படப்போகின்றனர். ஒரு வேளை அவர்களுக்கும் வதை முகாம்கள் காத்திருக்கலாம். ஈழத்தில் 60களில் துவங்கிய அரசியல் போராட்டமானது ஆயுதப் போராட்டமாக பரிணமித்து 30 ஆண்டுகள் வரை நீடித்து இப்போது பெரும் பின்டைவுக்குள்ளாகி உள்ளது. இப்பின்னடைவுக்கு காரணங்கள் என்ன? உள்ளது இப்பின்னடைவினை முழுமையாக மீளாய்வு செய்வதினால் மட்டுமே இனி எந்த திசையில் ஈழப்போராட்டம் செல்ல முடியும் என்பதை புரிந்து கெள்ள முடியும்.

முதலாவது, ஈழப்போராட்டத்தை நசுக்கியதில் பெரும் பங்கு ஆற்றிய உலகளாவிய அரசியல் சக்திகளிடமிருந்து நமது பரிசிலினையைத் துவங்குவோம். ஈழப்போராட்டம் துவங்கிய காலத்தில் இருந்த உலக அரசியல் சூழ்நிலை இப்போது இல்லை. உலக நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவளித்த சோவியத் ரசியா தலைமையிலான சோசலிச முகாம் இப்போது இல்லை என்பது தெரிந்தவிடயம். ௰ஆனால் சோசலிச முகாம் வீழ்ச்சியடைந்த பின்னர், உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டபின்னர், உலகச் சூழ்நிலை பாரிய அளவில் மாறியுள்ளது. அதுவும் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள மாற்றங்கள், கவனத்தில் கொள்ளப்படவில்லை.

பொதுவான கணிப்பாக தெற்காசிய நாடுகளின் மீது இந்தியா மட்டுமே தனது விரிவாதிக்கத்தை பேணி வருவதாக கருதப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டே இந்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கையில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளித்து வந்தது. தெற்காசிய நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கை போன்றவை இந்தியாவின் பெரியண்ணத்தனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்றுக்கொள்ள மறுத்தால், ஏதாவது ஒரு காரணம் கூறப்பட்டு அந்த நாடுகளுக்கு மிரட்டலோ எச்சரிக்கையோ விடப்படும். அதையும் மீறும் பட்சத்தில் அந்நாட்டின் மீது படைகளை அனுப்பி தாக்குதல் தொடுக்கப்படும். இலங்கை விசயத்தில் கடந்த காலத்தில் இது தான் நடந்தது.
இந்து மகா சமுத்திரத்தில் இலங்கை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளதால், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஒவ்வொரு நாடும் தனது கட்டுபாட்டிற்குள் இலங்கையைக் கொண்டுவர முயற்சித்து வந்தன. ஜே. ஆர். ஜெயவர்த்தன அதிபராக இருந்த போது அமெரிக்கா இலங்கையின் திரிகோணமலையில் என்ற பெயரில் தனது தளத்தை நிறுவி தொடர்ந்து இலங்கையை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வர விரும்பியது. அமெரிக்காவின் நோக்கங்களை கண்டுகொள்ளாமல் அதனுடன் நெருங்கிய உறவை ஜெயவர்த்தனே வளர்த்துக் கொண்டார். இன்னொருபுறம், அமெரிக்காவின் ஏவலாளியாக மேற்கு ஆசியாவில் செயல்படும் இஸ்ரேலின் பாதுகாப்புப் படையான சின்பெத்தையும் (ளுhin க்ஷநவா) உளவுப்படையான மொசாத்தையும் (ஆடிளளயன) இலங்கைக்கு கொண்டு வந்து தமிழர்களுக்கெதிராக சிங்கள இராணுவத்தை பயிற்றுவித்தனர்.
இச்சூழலில் தான் 1983ல் தமிழர்களுக்கெதிரான பெரும் கலவரம் வெடித்ததைப் பயன்படுத்தி ஈழப் போராளி அமைப்புகளுக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போதைய இந்திராகாந்தி அரசு இலங்கை அரசை அச்சுறுத்த பேராளிகளை பகடைக்காய்களாக பயன்படுத்திக் கொண்டது. இதே நோக்கத்துடன் இந்தியாவில் போராளிகள் செயல்படுவதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டது. இலங்கையில் இந்தியா தலையிட்டு ஆதிக்கம் செலுத்துவதை எதிர்க்கும் நோக்கத்துடன் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் குறிப்பாக மேற்கத்திய நாடுகளுடன் ஜெயவர்த்தனா மேலும் உறவை வளர்த்துக் கொள்ளத்துவங்கினர்.

இந்தியா தனது ஆதிக்க நலன்களுக்கு எதிரான செயல்பாடுகள் இலங்கையில் அதிகரிக்க அதிகரிக்க இராணுவத் தலையீட்டிற்காக தக்க தருணத்தை எதிர்நோக்கியிருந்தது. ஆனால் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவோ இந்தியாவின் ஆதரவு இன்றி மேற்கத்திய நாடுகளின் பக்கபலத்துடன் தமிழ்ப்போராளிகளை அழித்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தார். இதனால் தான் தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் கருத்துக்கள் எதையும் இலங்கை அரசு மதிக்கவில்லை. இந்தியாவிற்கு இலங்கைக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள் முறிந்தன. இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டபோது முற்றுகையிலிருந்து யாழ்ப்பாண மக்களுக்குத் தேவையான உணவை இந்திய விமானங்கள் போட்டன. அத்தோடு இந்திய விமானங்களை தாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டால் இலங்கையின் மீது போர் தொடுக்கவும் தயங்க மாட்டோம் என எச்சரித்தது. இதற்கு பின்னர், இலங்கை அரசு இந்தியாவிற்கு பணிந்தது. இதன் விளைவாக இந்திய - இலங்கை அல்லது ராஜிவ் -ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, இலங்கைக்கு செல்லும் இந்திய அமைதிப்படையிடம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். அமைதியை ஏற்படுத்த இந்திய படைகள் பொறுப்பேற்பதாகவும் இருந்தது. ஆனால் ஒப்பந்தமை உலவர்தற்கு முன்னரே இலங்கை இராணுவத்தினர் புலிகளைச் சுட்டு ஒப்பந்தத்தை மீறினர். போர் மூண்டது. 3 நாட்களுக்குள் சின்ன பையன்களை (புலிகளை) அடக்கிவிட்டு வருவோம் என்று கூறிக் சென்ற இந்திய அமைதிப்படை 3 ஆண்டுகளுக்குப் பின்னர், 1700 வீரர்களை இழந்து இந்தியா திரும்பியது. இதன் பின்னர், இந்தியா இலங்கையின் தலையிடுவதை குறைத்துக் கொண்டு பார்வையாளராகவே இருந்து வந்தது.

இவ்வாறான பொதுக்கணிப்பின் அடிப்படையில் அமைந்த இந்த நிகழ்வுகள் அனைவரும் அறிந்ததே. இந்த பொதுக்கணிப்பின் அடிப்படையிலான வரலற்று நிகழ்வுகளில் இந்தியா மட்டுமே தெற்காசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக கருதப்பட்டது. இலங்கையை தனது காலனிச் சொத்தாகவே இந்தியா கருதி வந்ததாகவும் இதில் யார் தலையிடுவதையும் இந்தியா விரும்பவில்லை எனவும் மதிப்பிடப்பட்டது. ஆனால் தெற்காசிய நாடுகளில் மட்டுமின்றி, ஆசியா முழுமைக்குமான ஆதிக்க சத்தியாக வளர்ந்து வரும் சீனாவின் பங்கு குறித்து யாரும் மதிப்பிடவில்லை. தெற்கு ஆசியாவில் தனது ஆதிக்க நலன்களுக்கெதிராக உள்ள சக்திகளை நசுக்க இந்திய அரசை பயன்படுத்திக் கொள்ளுமளவுக்கு சீனா வளர்ந்துள்ளது இந்தியா அமெரிக்காவுடனான தனது உறவை பலப்படுத்த துவங்கியபோதே அதற்கு எதிரிடையாகவே சீனா தனது ஆதிக்கத்தை தெற்காசியாவில் வளர்க்கத் துவங்கியது என்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் படைகள் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர், 1962களிலிருந்த சீனாவுடன் கொண்டிருந்த உறவை புதுப்பித்துக் கொண்டு இலங்கை அரசு வளர்க்கத் துவங்கியது. அதற்காக தயாராக இருந்த சீனாவும், இலங்கையின் அரவணைப்பை பயன்படுத்திக் கொண்டு இப்பகுதியில் கால் ஊன்றத் துவங்கியது.

1993ல் தென்மேற்கு இலங்கையிலுள்ள கல்லே நகரத்தில் உள்ள கப்பற்படைத்தளத்தில் சீனாவினைச் சேர்ந்த ‘நோரிங்கோ’ நிறுவனம் (ஊhinயே சூடிசவா ஐனேரளவசநைள ஊடிசயீடிசயவiடிn ௲ சூடீசுஐசூஊடீ) பிரம்மான்டமான ஆயுதங்கிடங்கு ஒன்றைத் திறந்து விற்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி இலங்கை அரசு தனக்குத்தேவையான அனைத்து இராணுவத் தளவாடங்களையும் இக்கிடங்கைத் தவிர வேறு யாரிடமும் வாங்கக் கூடாது.
சீனாவுடன் மேலும் நெருக்கமான உறவைக் கொள்ள சீனாவின் ஆதரவு நாடான ஈரானை நட்பு நாடாக்கிக் கொள்ள அந்நாட்டிற்கு சலுகையுடன் சபுகஸ்கந்தா என்ற பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதிக்கப்பட்டது. அதே போல் தென் இலங்கையில் உள்ள உமா ஆற்றில் 100 மெகாவாட் திறனுக்கான நீர் மின்நிலையம் அமைப்பதற்கும் ஈரானுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சபுகஸ்கந்தா சுத்திகரிப்பு நிலையத்தினை விரிவாக்குவதற்கு தேவையான நிதி என்று ஈரான் முன் வைத்த தொகையானது (300 விழுக்காட்டு) மிக அதிகமாக இருந்தாலும் இத்திட்டம் கை கூடினால் இலங்கைக்கு ஒரு பெரும் தொகையை வளர்ச்சி நிதியாக அளிக்க ஈரான் முன் வந்தது. எதிர்காலத்தில் இந்தியா இலங்கைக்கு எதிராகத் திரும்பும் சூழ்நிலை உருவானால் இலங்கை மண்ணில் ஈரான் இருந்தால் அது தனக்கு உதவிக்கரம் நீட்டும் என்ற எதிர்பார்ப்புடன் திட்டம் அமல்படுத்தப்படத் துவங்கியது.

இலங்கையின் தென்கோடிக் கடற்கரையிலுள்ள ஹம்பத்தொட்டா நகரை ஒரு பில்லியன் அமெரிக்கா டாலர் செலவில் துறைமுக நகராக உருவாக்கிடவும் சீனாவிற்கு இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது. சீனாவின் தனியார் நிறுவனங்களால் கட்டப்படும் இத்திட்டத்தின் முதல் கட்டமானது 2010ல் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டத்திலேயே பெட்ரோல், டீசல் ஆகியவற்றைச் சேமித்து வைக்கும் கண்டெய்னர் துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை, விமான நிலையம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு விடும்.

இதைவிட மேலாக 2008 ஏப்ரலில் இருந்து தூத்துக்குடியையும் கொழும்புவையும் இணைக்கும் கடலடிக் கம்பி வடத்தையும் (கேபிளையும்) சீனா கைப்பற்றி உள்ளது. இந்தியாவின் தொலைபேசியையும் இணையத்தையும் உலகத்தோடு இணைப்பதில் கடலடிக்கம்பி வடங்களே முக்கியம் பங்காற்றுகின்றன. இந்தப் பணியை டாட்டாவுக்கு சொந்தமான சீ மீ வீ என்ற (ளுநய-ஆந-றுந) கடலடிக் கம்பி வடங்களும் ரிலையன்ஸ் அம்பானிக்குச் சொந்தமான ஃபிளாக் (குடயப) என்ற கம்பி வடங்களும் ஏர்டெல்லின் சுனில் மிட்டல் மற்றும் சிங்டெல்லுக்குச் சொந்தமான 121 கம்பி வடங்களும் இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கின்றன. இத்துறையில் தனியாரைப் போலவே பி.எஸ். என். எல்லும் (க்ஷளுசூடு) 2006ல் இலங்கை டெலிகாம் நிறுவனத்துடன் சேர்ந்து 306 கி.மீ நீளமுள்ள கடலடியில் செல்லும் கம்பி வட சேவையை தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையில் நிறுவியது. ஜப்பானின் தனியார் நிறுவனம் ஒன்றினால் 180 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்ட கம்பி வடசேவை 2006 அக்டோபர் முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இப்போது இக்கம்பி வட சேவை சீன உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஆனந்த கிருஷ்ணன் என்ற மலேசிய தொழில் அதிபரின் நிறுவனத்திடம் சிக்கியிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து பி.எஸ்.என்.எல் மூலம் வெளி நாடுகளுக்குச் செல்லும் தொலைபேசி மற்றும் இணையதள மின்னஞ்சல் தகவல்களை ஒட்டு கேட்பதும் பதிவு செய்யவும் சீன உளவு நிறுவனங்களினால் முடியும். வெற்றிகரமாக முடிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியின் விழாவில் ராஜபக்சே சகோதரர்கள் நேரடியாக கலந்து கொண்டனர்.

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், இந்திய-அமெரிக்க இராணுவம் ஒப்பந்தங்கள் மற்றும் இந்திய -அமெரிக்க கப்பற்படைகள் கூட்டாக மேற்கொண்ட பயிற்சிகள் ஆகியவை துவங்கிய 2006ல் இருந்து இன்றுவரை சீனாவானது இலங்கையின் பல துறைகளிலும் வெகுவேகமாக கால்பதித்துள்ளது. ஆயுத உற்பத்தி, மின் உற்பத்தி, தொலைத் தொடர்பு, சாலைகள் அமைத்தல், தொடர் வண்டித் தொழில், மற்றும் துறைமுகத்துறை ஆகிய துறைகளில் தனது முதலீட்டைத் குவித்து தொழிலை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. 1990 களைப்போல இந்தச் செயல்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு அது தன்னுடைய நாட்டினையும் ஹாங்காங் தொழில் நிறுவனங்களையும் மட்டுமே நம்பியிருக்கவில்லை. தனது ஆதரவு நாடுகள் அனைத்தையும் களத்தில் இறக்கியுள்ளது. 2006 டிசம்பரில் இருந்து 2007 ஜுலைக்குள் இலங்கையிலும் இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும், வங்காளதேசத்திலும், பாகிஸ்தானிலும், சீன அரசுடன் தொடர்புடைய மேற்கூறிய நிகழ்வுகள் நடந்திருப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. பிறநாடுகளில் தனக்குச் சாதகமான ஒரு முதலாளி வர்க்கத்தை (பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் செய்ததுபோன்றது) உருவாக்கும் முயற்சியில் அது ஈடுபட்டிருக்கிறது. இங்கே இலங்கையில் இந்திய முதலாளிகளின் மூலதனம் இல்லையா எனத் தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. இலங்கையில் 25 இந்திய நிறுவனங்களின் 1500 இலட்சம் அமெரிக்க டாலர்கள் முதலீடாக உள்ளது. ஆனால் இது சீனாவின் முதலீட்டைப் ஒப்பிடும்போது குறைவே. இலங்கையில் சீனாவின் நேரடி முதலீடே ஆயிரம் கோடி டாலர்களுக்கு மேலானது (உதாரணமாக ஹம்பந் தொட்டா துறைமுக நகர் உருவாக்குவது மட்டும் 1 பில்லியன் அமெரிக்க டாலராகும்) சீனா மறைமுகமாக தன்னைச் சார்ந்துள்ள ஹாங்காங், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் மூலமாக பல கோடி டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சீனா நேரடியாகவும் மறைமுகமாகவும் தெற்காசியாவில் மட்டுமின்றி ஆசியா முழுமைக்கும் சீன அரசின் பொருளாதார ௲ இராணுவத் திட்டங்களை பிற நாடுகளில் செயல்படுத்தத் துவங்கியுள்ளது, பிறப்பில் சீனர்களல்லாத முதலாளிகளின் கூட்டமொன்றை திட்டமிட்டு அது வளர்த்து வருகிறது. இதற்கு என்ன காரணம்? இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவை அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் மிகவும் குறுகிய காலத்தில் எப்படி வளர்த்தெடுப்பது? அதற்கு முதல் தேவை எவருக்கும் அதிலும் குறிப்பாக இந்தியாவிற்கு சந்தேகம் ஏற்படாமல் இரகசியமாக செயல்படுவதுதான். இப்படி சீனாவின் நிறுவனங்களோ அல்லது ஹாங்காங்கிலிருந்து செயல்படும் சீனாவின் நிறுவனங்களோ செயல்பட்டால் அவை சந்தேகத்தை உருவாக்கும். ஆனால் சீனாவின் நல்லுறவுடன் உள்ளதும் சீனர்கள் அதிகமாக வாழ்கின்றதுமான நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் முன்னனித்தொழில்நிறுவனங்களைக் கொண்டு வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும்.
இந்த நிறுவனங்களை சீன அரசுடன் தொடர்புடைய நிறுவனங்கள் என்று இந்திய அரசு அவ்வளவு சுலபமாக ஒதுக்கி விட முடியாது. அப்படிப்பட்ட நடவடிக்கையை இந்திய அரசு எடுக்கும்பட்சத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் சீனாவின் பக்கம் சேர்ந்துவிடும் அபாயம் உண்டு. அதனால் இந்தியாவினால் ஒன்றுமே செயல்படமுடியாது என்று திட்டமிட்டே சீனா காய் நகர்த்திவருகிறது.

இதற்கு எல்லாம் உச்சமாக சீனா அனைத்துவிதமான இராணுவத்தளவாடங்களையும் ஆலோசனைகளையும் நிதி உதவியையும் இலங்கை அரசுக்கு அள்ளிக்கொடுத்தது ஏன்? ஒரு எளிமையான தந்திரம்தான். சீனாவை நம்பினோர் கைவிடப்பட்டார். சீனாவுடன் கூட்டுவைத்துக்கொள்ளும் நாடுகள் இலங்கையைப்போல திட்டவட்டமான இராணுவவெற்றிகளை அடையமுடியும் என்பதை சம்பந்தப்பட்ட உறவு நாடுகளின் அரசுகளுக்கு இந்த நான்காம் ஈழப்போரின் இராணுவமுடிவுகள் மூலம் தீர்க்கமாக அறிவிப்பதே சீன அரசின் நோக்கம். இதற்கு என்னவெல்லாம் செய்யப்பட்டது? விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டும் போருக்கான செலவை அரசு பொருட்படுத்தாமல் தாரளமாக அனுமதித்தது. முப்படைகளின் எண்ணிக்கை 2,00,000 ஆக உயர்த்தப்பட்டது. இலங்கை மக்கள் தொகை ஒப்பிடும்போது உலகிலேயே மிக அதிகமான பேரைக் கொண்ட இராணுவமாகும். 2009ல் இராணுவப்பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீடாக 1.66 மில்லியன் ----------- டாலர்கள் ஒதுக்கப்பட்டது. கடந்த மே 27ல் மேலும் (இலட்சம் பேர் இராணுவத்தில் இணைக்கப்பட போவதாகவும் சிங்கள இராணுவத்தளபதி அரசு தொலைக்காட்சியில் அறிவித்தார். விமானங்கள் மூலமாக 20,000 குண்டுகள் போடப்பட்டன. 2009ல் மட்டும் மரணமடைந்தவர்கள் குறைந்தபட்சமே 1 இலட்சமாகும்.
இப்படி மிகக்கொடூரமான யுத்தத்தின் நோக்கமே விடுதலைப்புலிகள் மீண்டும் தலையெடுக்கக்கூடாது என்பதற்குத்தான். சீனாவின் நோக்கமும் இதில் நிறைவேறியுள்ளது. புலிகளில் 80 விழுக்காட்டினர் முக்கியமாக அவர்களின் ஒட்டுமொத்த இராணுவபலமும், ஆயுதபலமும் வீழ்த்தப்பட்டுவிட்டது. இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையேயான முரண்பாட்டையும் சீனா பயன்படுத்தி இந்திய அரசின் இராணுவ தளபதிகளின் யுக்திகளை பயன்படுத்தியே புலிகள் அழிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மிகத்தாமதமாக புரிந்துகொண்ட இந்திய அரசு சீனாவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க போரின் இறுதிக்கட்டத்தில் மருத்துவர் குழுவினருடன் இணைத்து ‘ரா’ உளவு அதிகாரிகளையும் அனுப்பியுள்ளது. அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக, ஈழம் நான்காவது போரில் புலிகளை அழிப்பதற்கு இந்திய அரசை இலங்கையும், சீனாவும் இணைந்தே பயன்படுத்திக்கொண்டனர் என்பதும் தெளிவு.

இனி புலிகளுக்கு ஏன் பின்னடைவு என்பதை பரிசீலிக்கலாம் நமது பரிசீலனை அவர்களது அளப்பறிய தியாகம் வீரத்தையும் அங்கீகரித்தே துவங்குகிறது. சோ, இந்து ராம் வகையறாக்கள் போன்றதல்ல. அல்லது புலிகள் பாசிஸ்டுகள் என்று சிலர் கூறுவதுபோல் நாம் கூறவில்லை. அப்படிக்கூறுவது மக்களுக்காக இறுதிவரை போராடி உயிர்த்தியாகம் செய்த அவர்களின் அர்ப்பணிப்பை இழிவுபடுத்துவதாகும்.
உலகக் கொரில்லா போராட்ட வரலாற்றிலும் புலிகளுக்கு நிச்சயமாக ஒரு முக்கிய இடம் உண்டு. மலைகள் இல்லாத சமதரையில் கொரில்லாப்போராட்டம் சாத்தியமில்லை என்ற கருத்தைப்பொய்யாக்கி இலங்கையின் வடக்கு - கிழக்கு சமூக புவியியல் அமைப்பிற்கேற்ப வடிவமைத்து உலகின் மிக உறுதிவாய்ந்த கொரில்லா இயக்கமாக வளர்த்த பெருமையுடையவர்கள். ஒரு தேசிய இன விடுதலைப்படை போராட்ட அமைப்பாக இருந்து சொந்த விமானப்படை ஒன்றை முதன்முதலாக நிறுவிய சாதனையும் புலிகளையே சாரும். ஆனால் இராணுவரீதியாக புலிகளால் சாதிக்கப்பட்டதை அரசியல்ரீதியாக சாதிக்கப்பட்டதுடன் ஒப்பிட்டால் பின்னதும் ஒரு விழுக்காடு கூட தேறுமா என்பது ஐயமே.

அவர்களின் இராணுவ படை அமைப்பு எப்படி அவர்களுக்கு பலமோ, அதேபோல அவர்களின் (அரசியல் கண்ணோட்டமில்லாத) பரிசுத்தமான இராணுவ கண்ணோட்டமே அவர்களின் பலவீனமாகி அவர்களை பெரும் பின்னடைவுக்கும் எண்ணற்ற உயிர்தியாகங்களுக்கும் இழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளது.
துப்பாக்கிக்குழலில் இருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்ற மாவோவின் புகழ்பெற்ற மேற்கோளை தவறாகவும் தலைகீழாகவும் அவர்கள் புரிந்துகொண்டார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஒரு விடுதலைப் போராட்டத்தில் அரசியலில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவும், கைப்பற்றிய அரசியல் அதிகாரத்தை பாதுகாப்பதற்காகவும் மட்டுமே பயன்படுத்தும் ஒரு கருவி ஆயுதமாகும். மக்களை காப்பாற்றவும் அடக்குமுறையிலிருந்து அவர்களை விடுவிக்கவும் இன்னும் கூர்மையாகக் கூறினால் புரட்சி நடத்தி ஒடுக்குமுறை மற்றும் ஏற்றதாழ்வு இல்லாத சமூகம் அமைத்திடவும் அச்சமூகத்தை பாதுகாத்திடும் வரையிலும் மட்டுமே ஆயுதமானது முற்போக்கான பாத்திரம் வகிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள், தேசிய இனங்கள் மற்றும் தொழிலாளர்கள் புரட்சியின் மூலம் அல்லது விடுதலைப்போராட்டத்தின் மூலம் கைப்பற்றும் அரசியல் அதிகாரம் என்ற முழுமையின் ஒருபகுதியே ஆயுதமாகும். அதனால்தான் அரசியலை ஆணையில் வையுங்கள் என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டார் மாவோ. இங்கே மார்க்சிய இயங்கியலின் அரசியல் அதிகாரம் என்ற ஒரு முழுமையின் ஒரு பகுதியான ஆயுதத்தை முழுமையாக பார்த்துதான் புலிகளின் தவறாகும்.

தேசிய இன விடுதலை இயக்கம் என்ற முறையில் சரியான அரசியல் சித்தாந்தத்தையும் தத்துவத்தையும் வழிகாட்டியாக கொண்டிருக்கவேண்டும். ஆனாலும் இராணுவத்தலைமையும் இராணுவத்தளபதிகளும் பெயரளவுக்கு மட்டுமே அரசியல்பிரிவுமே (அரசியல் வேலைகள் என்ன செய்தது என்று இதுவரை யாருக்கும் தெரியாது) இருந்தது. உலகின் இப்போதைய அரசியல் சூழ்நிலை, ஆதிக்க சக்திகள் குறித்த தெளிவான புரிதல் புலிகளிடம் இல்லை. உலக மேலாதிக்கங்களான அமெரிக்கா குறித்தோ வளர்ந்துவரும் ஆதிக்க சக்திகளான ஐரோப்பியா ஒன்றியம் சீனா குறித்தோ போதுமான அரசியல் தெளிவு இல்லை. அவர்களிடம் ஆதிக்கசக்திகளை எதிர்க்கும் நிலைப்பாடும் இருந்ததில்லை. மறுகாலனியாதிக்கத்திற்கான உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலையும் உலக ஆதிக்க சக்திகளையும் அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்குட்பட்டே அவர்களின் ஆதரவுடன் தனி ஈழம் பெறுவதாகவே அவர்களின் பேச்சுகள் மற்றும் அறிக்கைகள் இருந்தன. (அதாவது கருணாநிதியிடம் த.ப.வீரபாண்டியன் தமிழ்தேசிய உணர்வைக் காண்பது போல) இந்த விடயத்தில் புலிகளின் வெளிப்படையான நேர்காணலே சிறந்த ஆதாரம். பிரபாகரன் உலக பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த நேர்காணலில் உலகமயமாக்கலை வரவேற்பதாக கூறியதை யாரும் மறக்க முடியாது. அவர்களின் எந்தவித எழுத்துப்பூர்வ ஆவணங்களிலும் ஏகாதிபத்திய எதிர்ப்போ உலக ஆதிக்க சக்திகளுக்கெதிரான நிலைப்பாடோ இருந்தது இல்லை.

உலகளவில் அரசியல் குறித்த பார்வைத் தெளிவில்லாததால் போரின் இறுதிவரை புலிகளால் இந்திய - சீனா முரண்பாட்டை புரிந்துகொள்ள இயலவில்லை. அதற்கேற்ப அவர்களின் அரசியல்யுக்திகளை வகுக்க முடியவில்லை.

உலகளவில் நாடுகளிலுள்ள உண்மையான மக்கள் இயக்கங்கள், தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் புரட்சிகர இயக்கங்கள் ஆகியவற்றை சார்ந்து செயல்படவும் இல்லை. அவர்களை நம்பவும் இல்லை. ஆனால், அதற்குமாறாக மக்களுக்கு எதிரிகளான அந்நாடுகளின் அரசுகள் தேர்தல் அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளை நம்பினர். அவர்களின் ஆதரவுடனே தனி ஈழம் பெற்றுவிட முடியும் என்று இறுதிவரை நம்பினர். உலகளவில் தாம் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டோம் என்பதை இறுதிக்கட்டத்தில் புரிந்துகொண்ட பின்னர் என்ன செய்யமுடியும்? இந்திய அரசையும் அதன் தெற்காசியாவின் ஆதிக்க நலன்களையும் புரிந்துகொண்டாலும், பாகிஸ்தானில் புகுந்து வங்கதேசத்தை உருவாக்கியதை போன்று இலங்கையில் படையெடுத்து தனிஈழம் பெற்றுத்தரும் என்று குருட்டுத்தனமாக நம்பினர். காங்கிரசுக்கு பதிலாக பா.ஜ.க அமைந்தால் இது நடைபெறும் என்றும் எதிர்பார்த்திருந்தனர். போரின் இறுதிவரையிலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரையிலும் காத்திருந்து பின்வாங்கும் போர்தந்திரத்தையே மேற்கொண்டதால் கோரமான தாக்குதலுக்கும் உள்ளாகினர். தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ் ஈழம் ஈழத்தமிழர்களின் விடுதலை குறித்து மக்களிடம் சென்று தொடர்ச்சியாக எந்த அரசியல் பணியும் செய்யாத இவர்களின் முகவர்களாக செயல்பட்ட அமைப்புகளையே நம்பினர். நகரங்களிலும் கூட மிகவும் அந்நியப்பட்டுப்போன சிறுபான்மையினரினாலும் சிறுபான்மையினரான புலிகளின் முகவர் அமைப்புகளுக்கு மக்களிடம் எந்த செல்வாக்கும் இல்லை. இவர்களின் அரசியல் பார்வையே இந்திய அரசின் ஆதிக்கத்திற்குட்பட்ட (இந்திய இராணுவத் தலையீட்டின் மூலம்) தமிழ்ஈழம் அமைப்பதுதான் தமிழ்ஈழத்தின் எதிரிகளே தமிழ்ஈழத்தை பெற்றுத் தருவதாக தொடர்ந்து பொய்யான பிரச்சாரத்தை செய்து புலிகளையும் ஏற்கவைத்தனர். இப்பேரழிவான யுத்ததிற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று தேசிய இனங்களின் எதிரியான இந்திய அரசை நம்பியதுதான்.

உண்மையான தேசிய இன விடுதலை மதவாதத்திற்கு எதிரான சக்தியாகவே உள்ளது. ஆனால் புலிகளால் முன்வைக்கப்பட்ட தமிழ்த்தேசியம் முஸ்லீம்களை உள்ளடக்கவில்லை. அவர்களை சிறுபான்மையினராக நட்பு சக்தியினராக அங்கீகரிக்கத் தவறினர். சிங்கள அரசிற்கும் முஸ்லீம்களுக்கும் ஏற்கனவே உள்ள முரண்பாட்டையும் கவனத்தில்கொள்ள தவறினர். இதன்விளைவாக கெடுவைத்து முஸ்லீம்களை வெளியேறுமாறு உத்திரவு பிறப்பித்தனர். அவர்களின் இறைவழிபாட்டுத்தலத்தில் புகுந்து தாக்குதல் தொடுத்து நேச சக்திகளான அவர்களை எதிர்முகாமுக்கு தள்ளிவிட்டனர்.
இலங்கை வாழ் பூர்வீகத்தமிழர்களிடம் குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழர்களிடம் முகிழ்த்த இன்றைய தமிழ்தேசிய போராட்டவரலாற்றில் மலையகத்தமிழர்கள் (இந்திய வம்சாவளித்தமிழர்கள்) இணைக்கப்படவில்லை.
மலையகத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோதும் அவர்கள் போதுமான உணவு, உறைவிடம், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டபோதிலும் ஈழத்தமிழ் தேசிய அமைப்புகள் அவர்களை கண்டுகொள்ளவில்லை. புலிகளின் தமிழ்ஈழ வரைபடத்தில் மட்டும் மலையகத் தமிழர்கள் வாழும் பகுதிகள் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்களின் தமிழ்த்தேசியப் பார்வையோ அவர்களை அந்நியப்படுத்தி இந்தியத் தமிழர்களாகவே பார்த்து வந்தது. இன்றுவரையிலும் அந்த நிலையில் மாற்றம் ஏதும் இல்லை.
சிங்கள மக்களில் கணிசமான பகுதியின் இனவயப்பட்டுள்ளனர் என்பது ஓரளவில் உண்மையாக இருந்தாலும் சிங்கள மக்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவோடு இல்லை என்ற உண்மையையும் புறந்தள்ளி விட முடியாது. சிங்கள மக்கள் மத்தியில் அரசின்பால் அதிருப்தியுற்ற மக்களை ஈழதமிழ்த்தேசிய விடுதலைக்கு ஆதரவாகவோ அல்லது நடுநிலைக்கோ அவர்களை கொண்டுசெல்ல வாய்ப்புகள் உண்டு. ஒருவேளை அவர்கள் மத்தியில் புலிகள் அரசியல் பணிகளை செய்திருந்தால் இது சாத்தியமாகி இருக்கலாம். போர் நிறுத்தம் ஏற்பட்ட காலங்களில் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள ஜனநாயக சக்திகளை தமது போராட்டத்திற்கு ஆதரவாக மாற்றியிருக்கலாம். போர்நிறுத்த காலத்தில் இதற்கான வாய்ப்பை புலிகள் நழுவவிட்டனர்.

ஒரு இனவெறி அரசையும் அதன் ஏதேச்சதிகாரத்தையும் எதிர்த்துப்போராடும் ஒரு தேசிய விடுதலை அமைப்பானது அடிப்படையில் ஜனநாயகத்தையும் தமது இன மக்களின்பாலும் ஜனநாயக அணுகுமுறையையும் கொண்டிருக்கவேண்டும். ஆனால் புலிகள் அமைப்பு இராணுவ அமைப்பாகவே செயல்பாட்டதாலும் சுத்தமான இராணுவக்கண்ணோட்டம் கொண்டிருந்தாலும் இயல்பாகவே ஜனநாயகமற்ற தன்மையையே கொண்டிருந்தது. சகவிடுதலை அமைப்புகளையும் ஒரே நோக்கம் கொண்ட தோழமையுள்ள தனி நபர்களையும் கருத்து வேறுபாட்டாளர்களையும் ஒடுக்கியது. படுகொலை செய்தது. இதற்கு நியாயப்படுத்தும் விதமாக எல்லாருமே துரோகிகள் காட்டிக்கொடுத்தவர்கள் என்று கூறியது யாரினாலும் இன்றுவரை ஏற்கப்படவில்லை. இதன் தவிர்க்கமுடியாத விளைவாக ஈழ விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இன்று புலிகளின் அமைப்பிற்குள்ளேயே இரண்டாம்கட்ட தலைமையும் இல்லை. இலங்கையிலும் எந்த ஜனநாயக அமைப்புகளும் இல்லாதவாறு செய்துவிட்டனர்.

புலிகள் தங்களது ஜனநாயகமற்ற தன்மையினால் உள்நாட்டில் பரந்துபட்ட நட்புசக்திகளைக்கொண்ட அமைப்புகளையோ அரசியல்படுத்தப்பட்ட மக்கள் ஆதரவு அமைப்புகளையோ கொண்ட ஒரு அய்க்கிய முன்னணியைக் கட்டவில்லை. வெளிநாடுகளிலும் அரசுகளை நம்பிய அளவில் இதேபோன்ற மக்கள் அமைப்புகளையும் அய்க்கிய முன்னணியையும் கட்ட வேண்டுமென்ற சிந்தனைகூட இருந்ததில்லை. புலிகளிடமிருந்த இன்னொரு தவறான கண்ணோட்டம் அவர்களின் பயன்படுத்தும் கோட்பாடுதான். யாரையும் எந்த சக்தியும் எப்படிப்பட்ட நிலையிலும் பயன்படுத்திக்கொள்வது. இந்த அரசியலற்ற பார்வையினால் புலிகளே பலமுறை இந்திய ஆதிக்க அரசியலுக்கு பகடைக்காய்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். தமிழக பிழைப்புவாத அரசியல் கட்சிகள் தங்களின் சுய இலாபத்திற்காக புலிகளை இன்றுவரை பயன்படுத்திக்கொண்டனர்.

விடுதலைப்புலிகள் செய்த யுக்தி ரீதியான கடுந்தவறு. ராஜுவ்காந்தியின் கொலையில் சம்பந்தப்பட்டதுதான். அரசியல்ரீதியாகவே அல்லது அரசியல்யுக்தியாகவே எந்தவிதத்திலும் பயனளிக்காததும் பொருந்தாததுமான நடவடிக்கையே அது. தனிநபரின் குரோதமான, பழிவாங்கும் நடவடிக்கையாகவே அமைந்தது. இந்திய மக்களிடம் குறிப்பாக தமிழகமக்களிடமும் ஈழவிடுதலை இயக்கத்தின் செல்வாக்கை இழக்கவைக்க, இதற்கென காத்திருந்த பார்ப்பன ஊடகச்சாதனங்கள் இதை சரியாகப்பயன்படுத்திக்கொண்டன. புலிகள் தமது நேர்காணலில் இதை ஒரு துன்பியல் நாடகம் என்று நியாயப்படுத்தினர். இதே துன்பியல் நாடகத்தை இங்குள்ள காங்கிரஸ் தலைமையும் அவர்கள் மீது இப்போது திருப்பி நடத்தியுள்ளது.

இவ்வளவு பெரிய தவறுகளை இழைத்ததால் ஈழத்தமிழ் தேசியவிடுதலை போராட்டமானது இன்று பெரும்பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கு புலிகள் மட்டும்தான் காரணம் என்பது இல்லை. தமிழகத்தில் தொடர்ந்து தமிழ்த்தேசிய உணர்வை அதற்கு உரிய செயல்திட்டத்துடன் ஊட்டி வளர்க்காததும் முக்கிய காரணங்களில் ஒன்று. அடுத்து ஏன் தமிழகத்தில் 1983ஐ போன்ற ஈழத்தமிழர்களுக்கு தமிழ் எழுச்சி ஏற்படவில்லை. இந்திய அரசுதான் சிங்கள அரசைவிட தமிழ்ஈழத்தை மலரவிடாமல் தடுக்கும் முதன்மையான ஆதிக்க சக்தி என்பது தமிழ்த்தேசியவாதிகளுக்கு தெரியாதது அல்ல. இந்தியாவின் கடல்வழி வாணிகத்தின் 80ரூ இலங்கையில் வழியாகத்தான் நடைபெறுகிறது. போக்குவரத்துச் சாதனங்கள் நுகர்வுப்பொருட்கள், மின்சார சாதனங்கள் ஆகியவற்றிற்கான சந்தைக்கு இந்திய முதலாளிகள் இலங்கையை நம்பி உள்ளனர். அதற்கெல்லாம் மேலாக இலங்கையில் தமிழ்ஈழம் உருவாகுமானால் அது இந்திய தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்பதை வட இந்திய ஊடகங்கள் எச்சரித்து வருவதை இந்திய அரசு உணர முடியாததும் அல்ல. அதனால் எல்லாவகையிலும் இந்திய முதலாளிகள் ஆளும் வர்க்கங்களின் பொருளாதார சுரண்டலுக்கும் அவர்களின் பாதுகாப்பு நலன்களுக்கும் ஒன்றுபட்ட இலங்கையே விரும்பினர் என்பது தெரிந்ததே.

தமிழ்தேசியவாத இயக்கங்கள் இந்திய அரசு தமிழர்களுக்கு போலித்தனமான மரியாதையைக்கூட கொடுக்கவில்லை என்பது புரிந்தும் தொடர்ந்து தனி ஈழம் பெற்றுத்தரவேண்டும் என்று நடுவண் அரசிடம் வேண்டுகோள் வைத்து வந்தனர். நடுவண அரசின் துரோகத்தை கிராமத்திலுள்ள மக்களுக்கு எடுத்துச்செல்லாததுமே தமிழகம் எழுச்சி கொள்ளாததற்கு முக்கிய காரணம். தமிழகத்தில் தொடர்ந்து இடைவிடாது தமிழ்த்தேசிய இன உணர்வை பரப்புவதற்கு என்ன செய்யப்பட்டுள்ளது என்பதை இனிமேலும் தாமதியாமல் பரிசீலிக்கவேண்டும். முல்லைப்பெரியார் பிரச்சினை, காவிரிப்பிரச்சினை அல்லது ஈழத்தமிழர் பிரச்சினையை (அங்கு தாக்குதல் தொடங்கும்போது மட்டும்) அவ்வப்போது பேசவதும் அதுவும் நகரங்கள் சார்ந்தும் ஊடகங்களில் தன்னை முன்னிருத்தி நேர்காணல் அளிப்பதும்தான் தமிழ்தேசியம் வளர்க்கும் பணியா? என்றைக்காவது தமிழ்த்தேசிய வரலாற்றையோ, இலங்கைத்தமிழர்களின் போராட்டம் ஏன் அதன் வரலாறு என்பதையோ தொடர்ந்து கருத்து பரப்பல் செய்துள்ளனரா? இக்கேள்விகளைப் பரிசீலித்து இவற்றுக்கான விடைகளைக் கண்டால் மட்டுமே தமிழகத்தில் ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்க முடியும்.

இறுதியாக ஒரு தேசிய விடுதலைப்பாதை தெளிவு சுளிவுகளில்லாத மேடுபள்ளங்கள் இல்லாத நேர்பாதையாக சிலர் கற்பனை செய்துகொள்கின்றனர். அந்த பார்வையுடன் சுத்தம், சுயம் பிரகாசமாக தேசிய விடுதலை இயக்கங்கள் இருக்கவேண்டும் என்று தமது தூய்மைவாதக மனோபாவத்துடன் விடுதலை இயக்கங்களை அணுகி விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். தேசிய விடுதலை போராட்டங்கள் நடைபெறும் நாடுகளின் வரலாறு முழுவதும் முன்னேறுதல்களும் மோசமான பின்னடைவுகளும் ஏற்பட்டே அப்போராட்டங்கள் விடுதலையை சாதித்து உள்ளன. இதேபோன்ற ஒன்று பின்னடைவே இங்கு ஏற்பட்டுள்ளது.
இந்த பலவீனங்களை களைந்துகொண்டு மீண்டும் ஈழத்தமிழர்களின் போராட்டம் முன்னேறும் என்பதே ஒவ்வொரு தமிழரின் ஆழமான நம்பிக்கை. தொன்மை வாய்ந்த தமிழர் வரலாறும் வீரமிக்க அவர்களது மரபும் பரம்பரையும் இந்த நம்பிக்கையை பொய்யாக்கிடாது.

(விரைவில் வெளிவர உள்ள நூலின் முதல் அத்தியாயமே இது. ஒரு விவாதத்திற்காக இங்கு முன்வைக்கப்படுகிறது)